மதமும் , ஜாதியும் இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு பக்கமும் கூரான கத்தி மறந்துராதீங்க. மதம் , ஜாதி அதை யாரும் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவோரை பதம்பார்க்கும் அதைத்தான் நான் மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.
பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி அரசியல் ரீதியாக எதையும் பேசட்டும் , நாம் கவலைப்படவில்லை. ஆனால் மதத்தை பயன்படுத்தி நாட்டை மதவாத நாடாக மாற்ற நினைத்தால் அதை தடுக்க வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது. நீங்கள் கொண்டுவரக்கூடிய சதி திட்டங்களால் இந்தியர்களின் பசி தீராது , வறுமை தீராது , வேலையில்லாத் திண்டாட்டம் போகாது. குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள் , தேசிய குடியுரிமை பதிவேடு , மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.
இந்தியாவை அமைதி சூழ்ந்த நாடாக மாற்றுங்கள். இந்தியாவினுடைய பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள். இந்திய பிரதமரிடம் மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதியான, நிம்மதியான வாழ்வு. அத்தகைய நிம்மதியான , அமைதியான , வாழ்க்கையை மக்களுக்கு பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி அவர்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய அழுத்தம் திருத்தமான தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.