கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயதான அய்யாசாமி என்பவருக்கு, 28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள வீட்டில் வேலையின்றி தனியாக தவித்த நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்த அந்த குடும்பம் மற்றும் அவர்களுடன் பணிபுரிவோர் உட்பட 10 பேர் கடந்த 13 ஆம் தேதி கோவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர்..
இதனைத் தொடர்ந்து அவர்கள் சுமார் 170 கி.மீ தூரம் நடந்து வந்த நிலையில், நேற்று மாலை சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே வந்தபோது காவல்துறையினர் கண்டு கொண்டனர். மேலும் அவர்களுடன் வழியில் இணைந்த 6 பேர் என மொத்தம் 16 பேரின் நிலை கண்டு மனம் இறங்கிய காவல் துறையினர் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர்.
அதை தொடர்ந்து போலீசார் கனரக வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு (கள்ளக்குறிச்சி) அனுப்பிவைத்தனர். இவ்வாறு நடந்து வந்த சிறுவன் காலில் செருப்பும் அணிந்திருக்கவில்லை. இதை கண்டு காவல்துறையினர் மிகுந்த வேதனை அடைந்தனர். லாரியில் செல்லும்போது அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.