திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி திருவள்ளூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளது. திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், சோழவரம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் இன்று ஒரே நாளில் 45 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திருவள்ளூரில் 315 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் 3வது இடத்தில் உள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 44ல் இருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 110 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருக்கு மக்கள் வெளியே செல்லவும், வெளியே இருப்பவர்கள் இங்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.