திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தன் தோழியுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகின்றார். இவருக்கும், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த உறவினர் பெண் ஷோபா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஷோபா திருப்பூரில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஆம்பூருக்கு வந்து தன் கணவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன்பின் ஷோபா வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீராவ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அதன்பின் ஷோபாவும், ஜெயஸ்ரீராவும் தோழியாக பழகி இருக்கின்றனர்.
இந்நிலையில் திருமணமான தோழி ஷோபாவை பார்ப்பதற்காக ஜெயஸ்ரீராவ் ஆம்பூருக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தார். இதனைதொடர்ந்து ஜெயஸ்ரீ ராவ் தனது சொந்த ஊருக்கு புறப்பட தயாரானபோது ஷோபா, கணவர் காமராஜ் ஆகியோர் சேர்ந்து அவரை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின் ஜோலார்பேட்டை வழியாக கொல்கத்தா நோக்கி செல்லும் ரயிலில் ஜெயஸ்ரீராவை ஏற்றி இருக்கையில் அமர வைத்தனர். அப்போது ஷோபா பேசிக் கொண்டிருந்த நிலையில் ரயில் புறப்படும் சற்றுநேரத்தில் ஜெயஸ்ரீராவுக்கு குடிநீர் பாட்டில் வாங்கி வரச்சொல்லி காமராஜை கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் காமராஜர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டில் வாங்க சென்றபோது ரயில் புறப்பட்டது.
அதன்பிறகு காமராஜ் ஓடிவந்து பார்த்தபோது ஷோபாவை காணாததால் குழப்பத்துடன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் காமராஜ் ஜெயஸ்ரீராவ் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காமராஜ் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷோபாவை தீவிரமாக தேடி வருகின்றனர். எனவே ஜெயஸ்ரீராவ் வீட்டு முகவரியை திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் இருந்து வாங்கி ஷோபாவை கண்டுபிடிப்பதற்கு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு கொல்கத்தா விரைந்து சென்று சென்றுள்ளனர்.