ஆள்மாறாட்டம் செய்து பெண்களை ஏமாற்றி மின்சாரம் பாய்ச்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து ஜெர்மன் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
30 வயதே ஆன டேவிட் என்னும் ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் மருத்துவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்து பெண்களிடம் வலி நிவாரண சிகிச்சை குறித்து சோதனை செய்யவுள்ளதாகக் கூறி அவர்களை தன் சோதனைக்கு உதவுமாறு கூறியுள்ளார். சில பெண்களுக்கு பணமும் கொடுத்துள்ளார்.
சோதனைக்கு முன்வந்த பெண்களிடம் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளார். வீட்டில் ஸ்பூன் போன்ற மின்சாரம் பரவும் உலோக பொருள்களை பயன்படுத்தி உடம்பில் மின்சக்தி செலுத்துமாறு கூறி, அதற்குமுன் அவர்களை நாற்காலியில் வேறு ஒரு நபர் மூலம் கயிற்றினால் கட்டச்சொல்லியிருக்கிறார்.
பிறகு மின்சக்தி செலுத்தப்பட்ட பெண்கள் வலி தாங்காமல் அலறும் சத்தம் கேட்டு அந்நபர் இன்பம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற முறையில் 13 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்நபர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மன் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை முயற்சி செய்த டேவிட் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் தரப்பில் வாதம் செய்தவர்கள் கூறினர்.