ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டிமற்றும் சுற்றுப்புற வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களது சொந்த நிலத்தில் விளைந்த தானியங்களையும், பயிர்களையும் செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஒழுங்குமுறை கூடத்திற்கு 4000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.ஆனால் வியாபாரிகள் ஏற்கனவே கொள்முதல் செய்து இருந்த நெல் மூட்டைகளை விற்பனைகூட குடோனில் வைத்திருந்ததால் சுமார் 2000 முட்டைகள் மட்டுமே குடோனில் வைக்கப்பட்டது. மீதமிருந்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைக்கப்பட்டது.
இதையடுத்து எதிர்பாராத விதமாக நேற்று காலை செஞ்சியில் மழை பெய்தது.இதனால் திறந்தவெளியில் வைக்கப்பட்ட அனைத்து நெல் மூட்டைகள் மழையில் நனைந்து மிகவும் சேதம் அடைந்தது.பின்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த தார்ப்பாய்களை வைத்து நெல் மூட்டைகளை மூடினர். இருப்பினும் 500 நெல் மூட்டை களுக்கு மேல் மழையில் முற்றிலும் நனைந்தன. இதனால் ஈரமான நெல்லை வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராததால் விவசாயிகள் மிகவும் மனவேதனைஅடைந்து உள்ளனர்.
வியாபாரிகளின் நெல் மூட்டைகளை தொடர்ந்து விற்பனைக்கூட குடோனிலேயே வைத்திருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் இப்படி மழையில் நனைவது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. ஆகையால் இதற்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.