விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் துரத்தி கையும் களவுமாக பிடித்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் தலைவாசல் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை காவல்துறையினர் சேலம் சிறையில் இருந்து கண்ணனை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இதனையடுத்து கண்ணனை வேனில் இருந்து காவல்துறையினர் இறக்கினர். அப்போது கண்ணனின் 2 கையும் சேர்த்து விலங்கு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கண்ணன் விசாரணைக்கு செல்லாமல் திடீரென்று காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதனால் சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் சிறிது தூரம் விரட்டி சென்று கண்ணனை கையும் களவுமாக பிடித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் கண்ணன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.