தென்கொரியாவில் சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
தென் கொரியாவில் குவான்ஜூ நகரில் உள்ள சாலையில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பேருந்து நிலையத்திற்கு அருகே பாதியாக இடிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் பயணிகள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது ,பாதியாக இடிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிடம், திடீரென அவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்களும் , பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 8 பேரை படுகாயங்களுடன் மீட்டு ,அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . ஆனால் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், புது கட்டிடம் கட்டுவதற்காகவே , 5 மாடிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இந்த பணி முழுமையடையாத நிலையில் ,கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தென்கொரிய அதிபரான மூன் லீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.