நாளை நடைபெறவுள்ள தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ஆனித்திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த 3-ந் தேதி ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்த ஆனிதேரோட்டத்தில் 4 ரத வீதிகளிலும் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் வலம் வரும்.
இந்த தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள். இந்நிலையில் தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து நேற்று தேருக்கு வடம் கயிறு கட்டும் பணி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7-ம் நாள் திருவிழாவான நேற்று காலை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் பல்லக்கு சப்பரத்தில் தவழ்ந்த கோலத்தில் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. நாளை அதிகாலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.