என்னிடம் விவாதிக்க பாஜகவில் யாரும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் மனுவை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமவளவன், அம்பேத்கர் பேசியதை தான் திருமாவளவன் பேசி இருக்கின்றேன். திருமாவளவன் பேசியது குற்றமென்றால் சனாதன கும்பலுக்கு நான் சொல்கின்றேன். அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள் ?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ? சனாதன கும்பலுக்கு அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? இந்தியாவில் மிகவும் மூர்க்கமாக தன்னுடைய இறுதி மூச்சுவரை சனாதன எதிர்ப்புப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர். மகளிர் குளத்தை இழிவு படுத்துகின்ற, பெண்களை கேவலமாக, ஆண்களின் இச்சை பொருளாக்கி காட்டுகின்ற மனு நூலை நாங்கள் விமர்சிக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். அந்த நூலை தடை செய்கிற வரையில் எமது அறப்போர் தொடரும் தொடரும், தொடரும் என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
மோடியை எதிர்த்து அரசியல் செய்கின்ற இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி. மனுவை யார் படிக்கிறார்கள் என்பதை விவாதத்தில் பார்ப்போம். சனாதனிகள் வரட்டும், யார் படித்துள்ளார்கள், யார் படிக்கவில்லை என்பதை பொது விவாதம் நடத்துவோம். எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யுங்கள். சனாதனிகளும் நாங்களும் விவாதிக்கிறோம். மனுவை ஏற்பதா ? வேண்டாமா ? அதை தடை செய்யலாமா ? வேண்டாமா ? என்பதை பொதுவெளியில் விவாதித்து முடிவு செய்வோம். என்னிடம் விவாதம் செய்ய பாஜகவில் தகுதியானவர்கள் யாருமே இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.