தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது.
வழக்கு விவரம் :
இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? என்று அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் ஊரடங்கை 100% தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை.
சென்னையில் இருந்து வெளி மாவட்டம் செல்வோருக்கு இ-பாஸ் நிறுத்தப்பட்ட தகவல் வதந்தி, இ-பாஸ் வழங்கும் பணிகள் நிறுத்திவைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. சென்னையிலிருந்து வெளியே செல்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து அரசின் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் மருத்துவ நிபுணர் குழு தெரிவிக்கும் கருத்து அடிப்படையில் அவ்வப்போது அரசு முடிவு எடுத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.