அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் சிலையில் போடப்பட்டிருந்த அரை பவுன் எடையுள்ள 2 தங்க பொட்டுக்கள் மற்றும் 2 தங்க காசுகள் ஆகியவை காணாமல் போயிருந்ததை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து பூசாரி ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.