மொபட்டை திருடியவரை கையும் களவுமாக பிடித்து உரிமையாளரே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தன் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, அவருடைய மொபட்டை மர்மநபர்கள் யாரோ திருடி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் நித்தியானந்தன் புகார் அளித்தார். அதன் பின் காளிங்கராயன் பாளையம் அணைக்கட்டு பகுதியில் தனது மொபட்டுடன் நின்று கொண்டிருந்தவரை சித்தோடு காவல் நிலையத்தில் நித்தியானந்தன் கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஜம்பை பகுதியில் வசித்து வரும் பிரபு என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த போலீசார் அவர் திருடிய மொபட்டை யும் பறிமுதல் செய்து விட்டனர்.