அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை பிரித்து ரூ.51 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்நிலையில் செந்தில்நாதன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது மேஜையின் டிராவில் இருந்த ரூ.40 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததால் மர்மநபர்கள் புகுந்து ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த கடையை அடுத்துள்ள அப்துல்ஜப்பார் என்பவருக்கு சொந்தமான டீசல் என்ஜின் ஒர்க் ஷாப்பில் ரூ.3 ஆயிரமும், பழனியப்பன் என்பவரது சலூன் கடையில் ரூ. 8 ஆயிரம் உள்பட ரூ.51 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கடை உரிமையாளர்கள் காங்கேயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.