வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம்பட்டி பகுதியில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்ட்டு உத்தரவின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வேனை காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேன் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெங்கடேஷ் என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தனது நண்பரான விஜய் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து விஜயின் வீட்டிற்கு விரைந்து சென்று காவல்துறையினர் நடத்திய சோதனையில் 194 மது பாட்டில்கள் பதுங்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் காவல் துறையினரை பார்த்ததும் விஜய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த வேன், 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணம், வேன் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு தப்பி ஓடிய விஜய்யை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.