கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வேலைக்கு செல்வதற்கு அனுமதிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் உலகம் முழுக்க 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,89,000 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இப்படி வீட்டுக்கு திரும்பிய பலரும் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் மீண்டும் வழக்கம்போல வேலைக்கு செல்லும் யோசனையில் இருக்கின்றனர்.. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியபின் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது உடலில் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் அவர்களை கொரோனா மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இது குறித்து ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் பல நாடுகளில் ‘இம்யுனிட்டி பாஸ்போர்ட்’ (immunity passport) என்ற பெயரில் நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ் வழங்கி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களை வேலைக்கு திரும்பச் செல்ல வைக்கலாம் என்ற யோசனைக்கு உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறி இருப்பது என்னவென்றால், “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு , மீண்டவர்கள் 2 ஆவது முறையாக அந்த தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள், அவர்களது உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கின்றது என்பதற்கு தற்போது ஆதாரம் எதுவும் கிடையாது. ஆகவே இதுதொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகின்றது.
இந்த சூழலில் சான்றிதழ் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியின் துல்லியத்தை உறுதிப்படுத்தவே முடியாது. அப்படி நோய் எதிர்ப்புச்சக்தி சானறிதழ் வழங்கினால் கொரோனா பரவும் அபாயங்கள் மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது..
புதிய கொரோனா வைரசுக்கான நோய் எதிர்ப்புச்சக்தி பற்றி இன்னும் சரிபார்ப்புகள் மற்றும் மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கு பிறகு தான் நோய் எதிர்ப்புச்சக்தியின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.