ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 408 ஆக அதிகரித்துள்ளது. அதில் 114 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். இதுவரை 270 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதேபோல, 3 பேர் இதுவரை உயிரிழந்ந்துள்ளனர். மேலும், தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு கேரளாவில் கைமீறி போனது. ஆனால் சரியான தொடர்பு தடமறிதல் மூலம், அதைக் கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் முடிந்தது. உலகில் பதிவான மொத்த இறப்பு விகிதம் 5.75, அதில் இந்தியாவில் மட்டும் 2.8 – லிருந்து 3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மொத்த இறப்பு விகிதம் 0.58 ஆக உள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவித்தார். மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையே எந்த மோதலும் இல்லை எனவும், முடிதிருத்தும் கடைகள் திறக்கப்படாது என்றும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டுள்ளது. உணவகங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே உணவு விநியோகம் செய்யும் என தெரிவித்துள்ளார்
தற்போது வெளியான தகவலின் படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 656 ஆக உயர்ந்துள்ளது. அதில், 14,255 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,842 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.