அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது அமெரிக்கா. இதையடுத்து அரசுப்படையுடன் சேர்ந்து அமெரிக்காவும் தலிபானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தது.
இதையடுத்து நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், ஆப்கானில் உள்ள தங்களது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். அதைதொடர்ந்து தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாகவே போரைமுடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதையடுத்து, ஆப்கானில் தற்போது வரை போர் நிறுத்தம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தான், கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்கா – தலிபான்கள் இடையே இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கின்றது. இந்த உடன்படிக்கை மூலம், 18 ஆண்டுகளாக ஆப்கானில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுகின்றது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் விழாவில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கலந்து கொள்கிறார். முன்னதாக காபூல் சென்ற அவர், ஆப்கானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் தெரிவித்தார். மேலும் அவர் ஆப்கானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்து, அமெரிக்க-தலிபான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், நாட்டில் பல்வேறு மறுசீரமைப்பு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இந்தியா கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.