விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளால் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டு வரும் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
விஷவாயு சம்பவம் – பிரதமர் மோடி ஆலோசனை:
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடரபாக பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.