பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பழுது பார்க்கும் ரயில்வே யார்டில் சுரங்கம் தோண்டி குற்றவாளிகள் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளனர். இதனையடுத்து ரயிலில் இருந்து கழட்டிய ஒவ்வொரு பார்ட்டையும் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் ஒரு பழைய இரும்பு குடோனை போலீசார் ஆய்வு செய்ததில் ரயிலின் பார்ட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இதை கைப்பற்றிய போலீசார் குடோன் உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.