கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் ஷாஜகான்.. இவருக்கு வயது 31 ஆகிறது.. இவருக்கு பனாசீர் (28) என்ற மனைவி உள்ளார்… இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், எண்ணூரில் இருக்கும் அவரது தந்தை வீட்டுக்கு இந்த தம்பதியினர் பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எண்ணூர் விரைவு சாலை முழுவதுமே கண்டெய்னர் லாரிகள் இருந்துள்ளன..
இதனால் எப்படி செல்வது என்று திகைத்துப்போன இளம் தம்பதிகள் பொறுமையாக வாகனத்தை இயக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, முந்திச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக அவர்கள் மீது மோதியது. இதில் 2 கண்டெய்னர் லாரிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட இளம் தம்பதியினர் மீது டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உடனடியாகக் கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. நீண்ட நேரம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை கற்களால் வீசி அடித்து நொறுக்கினர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உறவினர்களிடம் சமாதானம் பேசிய பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இறந்த தம்பதியினரின் சடலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..