விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் அறிவுராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அறிவுராஜ் அவரது உறவினர் தவமணி(18) என்பவருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கிணறு அருகில் வைத்து மது அருந்திவிட்டு குளித்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த 2 வாலிபர்களும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் மூழ்கிய 2 பேரையும் மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் மருத்துவ மருத்துவமனைக்கு அவர்களின் உடலை அனுப்பியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.