Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வறுமையால் திருடனாக மாறிய 15 வயது சிறுவன்..!!

கொரோனாவால் நீடித்து வரும் ஊரடங்கால், வறுமையின் காரணமாக 15 வயது சிறுவன் திருடனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வரும்  சண்முகவேல் என்பவர் மேள கலைஞராவார்.. தற்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. இதன் காரணமாக சண்முகவேலின் மனைவி மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் செயல்படவில்லை என்பதால் வறுமையின் பிடியில் பசியின் கொடுமையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில், சண்முகவேலின் 15 வயது மகன் காளீஸ்வரன் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு தெருவில் கிடக்கின்ற பழைய பேப்பா், மதுபாட்டில்களை சேர்த்து இரும்புக்கடைகளில் விற்று வந்துள்ளான்.. அதில் கிடைக்கும் வருமானத்தை தன்னுடைய  குடும்பத்திற்கு கொடுத்து உதவியாக இருந்து வந்துள்ளான். இந்த சூழலில், கொரோனாவால் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், தான் சேகரித்து வைத்திருக்கும் மதுபாட்டிகள் மற்றும் பழைய பேப்பர்களை விற்க முடியாத சூழல் உருவானது. குடும்ப வறுமை ஒருபக்கம் காளீஸ்வரனை நிலைகுலையச் செய்துள்ளது. இந்தநிலையில், சாத்தூர் அண்ணாநகரில் இருக்கும் செல்வராஜ் (51) என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக்கடையில் 7,000 ரூபாய் பணத்தை காளீஸ்வரன் திருடிச் சென்றதாக கடை உரிமையாளர் சாத்தூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் கடையின் சிசிடிவி காட்சிகளை வைத்து காளீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். சிறுவன் காளீஸ்வரனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், குடும்ப வறுமையின் காரணமாக தான் திருடியதாக கூறியுள்ளான். இதையடுத்து, அந்த சிறுவனை சொந்த பிணையில் சாத்தூா் நீதிமன்ற நீதிபதி விடுவித்தார்.

Categories

Tech |