சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது.
சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் அங்கு இருக்கும் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் நேற்று முன்தினம் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் தற்போதைய வான்வழித் தாக்குதல் ரஷ்யாவின் நேரடி தலையீடு அல்லது அவர்களின் ஆயுதங்களின் உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. இதற்கிடையில், பதற்றத்தைத் தணிக்க ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபர் எர்டோகனும் தொலைபேசியில் பேசி இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர்.
அப்போது, தற்போதைய நிலைமை குறித்து எர்டோகனிடம் கவலை தெரிவித்தார். இருப்பினும், இந்த தாக்குதலுக்கு துருக்கி பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.