மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று காலை தீர்ப்பு வெளியானது. இதில் உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தார். பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார் ராகுல் காந்தி.
இதையடுத்து ராகுலுக்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லேகியால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கவனமாக பேசுங்கள் ராகுல்காந்தி என்றும், எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது ராகுல்காந்தி கவனமாக பேச வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.