சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 43 (41) ரன்களும், கடைசியில் அக்சர் பட்டேல் 23 (13) ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அதிக பட்சமாக புவனேஸ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரஷித் கான், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். ஒருபுறம் டேவிட் வார்னர் பொறுமையாக விளையாட மறுபுறம் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அரைசதம் அடிப்பார் என்ற நிலையில் ராகுல் திவேதியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து டேவிட் வார்னரும் 11 (18) ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் மனிஷ் பாண்டே 10, விஜய் சங்கர் 16, தீபக் ஹூடா 10 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின் வந்த முகமது நபி, ரபாடாவின் 18.3 வது ஓவரில் சிக்ஸர் மூலம் வெற்றியை வசமாக்கினார். சன்ரைசர்ஸ் 18.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது நபி 17 *(9) ரன்னிலும், யூசுப் பதான் 9* (11) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் லமிச்சானே, அக்சர் பட்டேல், ரபாடா, ராகுல் திவேதியா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.