மாவுக்கோலம் போட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் முக ஸ்டாலினை சந்தித்தனர்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் வாதமாக உள்ளது.
இதற்கிடையே, இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை அடையார் பெசன்ட் நகரில் நேற்று கல்லூரி மாணவர்கள் ‘வேண்டாம் CAA – NRC’ போன்ற வாசகங்களைக் கோலமாக இட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாணவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
மாநில அரசின் இச்செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. மாணவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து இன்று காலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரது வீடுகளின் வாசல்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் இடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கோலமிட்டதால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். அப்போது எம்பி கனிமொழியும் உடனிருந்தார். இதுகுறித்து ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். அதில், மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது!
எடப்பாடி அரசுக்கு நன்றி! #DMKkolamProtest pic.twitter.com/qEx1Zx1Qvm
— M.K.Stalin (@mkstalin) December 30, 2019