சூடான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தது. இதையடுத்து சர்வதேச நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதோடு நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல் புர்ஹான் ஆட்சி கவுன்சில் தலைவராக கடந்த வியாழக்கிழமை அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அந்நாட்டில் ஐந்து பேர் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தினை சூடான் நாட்டின் மருத்துவர்கள் சங்கத்தின் மத்திய கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த போராட்டத்தில் ஒருவர் கண்ணீர் புகை குண்டு வீச்சில் மூச்சுத்திணறி இறந்ததாகவும், 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் அந்த கமிட்டி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
அதேபோல் அரசு தொலைக்காட்சி இந்த போராட்டத்தில் சுமார் 39 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு படையினர் ஆம்டர்மன் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களை பிடித்துச் சென்றதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் கார்ட்டூம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து சூடான் நாட்டில் பதற்றமான சூழல் காணப்பட்டு வருகிறது.