கொரோனா காலத்தில் சேமிப்பு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அப்பகுதி மக்கள் படும் இன்னல்களை பார்த்த அந்த மாணவி தனது எதிற்கான படிப்பிற்காக வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்து அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார். சுமார் 1,500 குடும்பங்களுக்கு மாணவ நேத்ரா உதவி செய்தார். இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி மாணவி நேத்ராவை பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இவரை கவுரவிக்கும் வகையில் ஐநாவின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சேமிப்பு பணம் ரூ. 5 லட்சத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு பாராட்டுகள் என முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி இதுபோன்ற பல பாராட்டுகளையும், அங்கீகாரம் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.