ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முழு ஆதரவையும் வழங்க தயார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சம்மி சில்வா (Shammi Silva) ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்பட்டால், தொடரின் பங்குதாரர்களுக்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்படும். எனவே, 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரை தென்னாபிரிக்காவில் நடத்தியது போல வேறொரு நாட்டில் தொடரை நடத்த முடியும்.
எனவே, நாங்கள் இலங்கையில் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பை தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்கும் அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம்.
அதுமட்டுமின்றி இலங்கையில் இருக்கும் சுகாதாரத் துறையின் அனுமதி மற்றும் அவர்களுக்கு கீழ்பட்ட கண்காணிப்புடன் இந்த போட்டித் தொடரை நடத்துவதற்கும் நாங்கள் வசதிகளை மேற்கொள்வோம். இந்த தொடரை இலங்கையில் நடத்தும் பட்சத்தில், நாட்டுக்கும், கிரிக்கெட் வாரியத்திற்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதியளிப்பதாக கூறியதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்குமா என்பதை ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்… என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..