Categories
மாநில செய்திகள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேனியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் நேற்று (அக்.16) வெளியானது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் இந்திய அளவில் 8ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் தரவரிசையில் தேனியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார், இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நாரயணசாமி ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி.

மாணவர் ஜீவித்குமார் சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொண்டார். 193 மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துப்படிப்பில் சேர முடியாமல் போனது.

மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் விடாமுயற்சியுடன் இருந்த ஜீவித்குமாரின் ஆர்வத்தைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர் ஜீவித்குமாருக்காக நிதி திரட்டி தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தனர்.

ஓராண்டு பயிற்சியை முடித்து விட்டு இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய மாணவர் ஜீவித்குமார், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது இந்திய அளவில் 1823ஆவது இடமாக இருந்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களின் தரவரிசை அடிப்படையில் முதலிடமாகும்.

மேலும், இதுவரையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் இதுவே அதிகபட்சம் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |