சென்னையில் மனநலம் பாதித்த நபர் ஒருவர், தனது மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுயைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி சாவித்திரி மற்றும் தாயாருடன் ஒன்றாக வசித்து வருகின்றார். ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் ரவி இன்று காலை வீட்டு வாசலில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்த ரவியின் தாயார் சாவித்திரி எங்கே இருக்கிறாள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடியே ரவி நின்றுள்ளார். இதையடுத்து ரவியின் தாயார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், தலையில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் சாவித்திரி இறந்து கிடந்தார்.
இதை பார்த்து பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்க, அவர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப் பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட ரவி சாவித்திரியை தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.