ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கழிவுநீர் மனநல சிகிச்சை பகுதிகளில் சுற்றி குளம்போல் தேங்கி கிடப்பதால் அந்த பிரிவை தற்காலிகமாக மூடி விட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக மாற்று இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆகியவற்றையும் கழிவு நீர் சூழ்ந்து இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதோடு சாக்கடை கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் உடனடியாக சரி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.