11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதேபோல 10ம் வகுப்பு பொதுதேர்வானது வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 37 மண்டலங்களை 5 மண்டலங்களாக பிரித்து 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அதிகாரிகள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியையும் மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் அவசியம் இல்லை என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 26ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.