திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வந்த சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். மேலும் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் உதயநிதிஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் இளைஞர் அணிச் செயலாளர் சாமிநாதன் கூறுகையில் , திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உதயநிதி அவர்களுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.