சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் இன்று மதுரை வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் மரணமடைந்துள்ளனர் என முதலில் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இன்று காலை இந்தியா – சீனா மோதலில் காயமடைந்த 4 இந்திய வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடம் என கூறப்பட்டது.
இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். இந்த சூழலில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் இன்று மாலை 6.30 மணிக்கு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆறுதல் அளித்துள்ளார்.