தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் கொண்டிருப்பதையும் கல்லணை அருகேயுள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன்(வயது 59) பார்த்தார்.
பின்னர் கூலித்தொழிலாளி நடராஜன் அந்த குரங்குகளுக்கு ஏதாவது உணவு வழங்க வேண்டும் என்று எண்ணி, தனது ஆசையை தன்னுடைய மனைவியிடம் தெரிவித்தார்.. இருவரும் கலந்து ஆலோசனை நடத்தினர்.. கணவரின் எண்ணத்தை அறிந்து கொண்ட அவருடைய மனைவியும் அதற்கு சம்மதித்தார்.. அதனைத்தொடர்ந்து தினமும் ஒரு எவர்சில்வர் வாளியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் புளி சாதம் என தங்கள் வீட்டில் கிடைப்பதை வைத்து சமையல் செய்து குரங்குகள் வசிக்கும் அந்த பகுதிக்கு எடுத்து வருகிறார், நடராஜன். உணவுடன் சாலைக்கு வந்து குரங்குகளை நடராஜன் அழைத்ததுமே, அவைகள் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து சாலை ஓரத்தில் வைக்கும் உணவை சாப்பிடும்.. பின்னர் சாப்பிட்டு முடித்ததும் குரங்குகள் மீண்டும் மரங்களில் ஏறிச்சென்று விடுகின்றன.
இது ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் நடப்பதல்ல.. கூலித்தொழிலாளியான நடராஜன் தான், கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைத்து வரும் வருமானத்தைக் கொண்டு கடந்த ஓராண்டாக குரங்குகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். தனக்கு இயலாத சூழலிலும் இடைவிடாத மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் நடராஜனின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.