தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போது, 130 கோடி இந்தியர்களின் சார்பாக ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். 3000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் இந்த பாடலை பாடியதாக கூறினார்.

உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான் பாரதத்தின் பண்பாடு என்று பேசினார். இந்தியா புத்த மதத்தை தான் வழங்கியதே தவிர யுத்தத்தை அல்ல என்றும், ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க அனைவரும் இணைய வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார். மேலும் இந்தியாவை பற்றி பெருமையாக பல கருத்துக்களை பேசினார்.

இந்நிலையில் மதுரை ஆரப்பாளையத்தில் புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இதுவரை எந்த பிரதமரும் தமிழை சுட்டிக்காட்டி பேசியதில்லை. பிரதமர் மோடி தமிழ் வரலாறு அறிந்தவர் என்பதால் தான் அடிக்கடி தமிழில் பேசி வருகிறார். தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். ஐ.நா.வில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது தமிழுக்குப் பெருமை என்று தெரிவித்தார். மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.