வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு சிக்னல் கிடைக்க வில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர் அகிடோஷி ஒகமோட்டோ (Akitoshi Okamoto). இவர் தனது செல்போனில் சரியாக சிக்னல் மற்றும் டேட்டா கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
8 நாட்களில் 24,000 போன் கால்
ஆனால், அவருக்குச் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தொடர்ச்சியாக அழைத்துள்ளார். அதாவது, எட்டு நாட்களில் சுமார் 24 ஆயிரம் முறை கால் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அகிடோஷி வாடிக்கையாளர் மைய அலுவலருக்கு அழைத்துவிட்டு போனை அவர் எடுத்ததும், துண்டிப்பதை வாடிக்கையாகவும் வைத்திருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செல்போன் நிர்வாகம், வாடிக்கையாளர் குறித்து காவல்துறையில் அளித்தப் புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது தொலைபேசியில் ஆயிரக்கணக்கான அழைப்புகள்:
பின்னர் நடத்திய விசாரணையில், ஒகமோட்டோ நிறுவனத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை அவமதிக்கவும் பல்வேறு பொது தொலைபேசிகளிலிருந்து ஆயிரக்கணக்கான அழைப்புகளை அகிடோஷி விடுத்தது தெரிய வந்தது. தற்போது, அகிடோஷி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.