ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜகாங்கீர்அலி மரத்தில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஜகாங்கீர்அலி உடலை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜகாங்கீர்அலி மகன் காதர்மைதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.