பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் மட்டுமே 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிந்து மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், 234 பேருக்கு பரிசோதனை செய்ததில் 115 பேருக்கு நோய் தொற்று இல்லை என்றும், 119 பேருக்கு தொற்று இருப்பதாகவும் கூறினார்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 193 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.