கீழடியை முன்னிட்டு சிவகாளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உள்ளிட்ட பகுதிகளில் அகல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானது என மேற்கொண்ட அகழாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காண நாள்தோறும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், அது சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. இந்நிலையில் மதுரை தமிழ் சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஐந்தாம் கட்ட ஆய்வு பணி மட்டுமே நடைபெற்று வரும் சூழ்நிலையில் தமிழரின் வரலாறு தொன்மை குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அடுத்து அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ளவும், மேலும் கொடுமணல், சிவகாளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பத்தை பெற்று மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து தற்பொழுது உத்தரவிட்டு உள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.