பணி செய்வதற்கான திறமையை பெறுவதற்கு இந்த கல்விமுறை நம் குழந்தைகளுக்கு உதவவில்லை.
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் தொழில்நுட்ப அறிவும் திறமையும் இன்றைய உலகில் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய இளைஞர்களை தேவைக்கேற்றார்போல் தயார் செய்து மனித வளத்தை மேம்படுத்துவதே மத்திய, மாநில அரசுகளின் சவாலாக உள்ளது. 90 விழுக்காடு இளைஞர்களுக்கு பணி செய்வதற்கான தகுதி இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை களையும் விதமாக ரூ. 20,000 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பணி செய்வதற்கான தகுதிகளை மேம்படுத்த இளைஞர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை இதற்காகத்தான் அரசு பயன்படுத்தவுள்ளது. நாட்டின் வறுமையை எதிர்த்து போராடுவதில் ஸ்கில் இந்தியா திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். 2020ஆம் ஆண்டு, 40 கோடி இந்தியர்கள் பணி செய்வதற்கான தகுதிகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள் என 2009ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டின் முடிவுக்குள், 52 லட்சம் இந்தியர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துள்ளனர். அதில், 12.60 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது என அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது. நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த அனைத்து துறைகளை ஒன்றிணைத்து திட்டங்களை வகுக்க மத்திய அரசு, மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் சரியான காலத்தில் செயல்படுத்தப்பட்டால், சீனாவின் கல்விதுறைக்கு இணையாக இந்தியாவின் கல்விதுறை மேம்பட வாய்ப்புள்ளது. 9 வருட கல்விமுறை திட்டத்தை சீனா செயல்படுத்திவருகிறது. இதில், கடைசி மூன்றாண்டுகள் பணி செய்வதற்கான திறமைகள் கற்றுத்தரப்படுகிறது.
மேல்நிலை கல்வி முடித்துவரும் குழந்தைகள், கல்வி தகுதிகள் மட்டுமின்றி பணி செய்வதற்கான தகுதிகளை பெற்றுவருகின்றனர். இதன்மூலம், தொழில்சாலைகள், சந்தைகள் தொடங்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. தங்களின் திறமைகளையும் பணி செய்வதற்கான தகுதிகளையும் பயன்படுத்திக்கொள்வதில், தென் கொரியா (96%), ஜெர்மனி(75%), பிரிட்டன்(68%) ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளது. ஆனால், 5 விழுக்காடு திறமையை மட்டுமே இந்தியா பயன்படுத்தவதாக சர்வதேச அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள், 96 கோடி தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கல்வியின் அடிப்படையில் 31 கோடி இந்தியர்கள் மட்டுமே தகுதியுள்ளவராக இருக்கிறார்கள் எனவும் அதிலும் பணி செய்வதற்கான தகுதிகள் 15 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே உள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்சார்ந்த திறமை உள்ள 63 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 53 ஆவது இடத்தில் உள்ளது. இது நம் எதிர்கால தலைமுறைக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. 70 விழுக்காடு இந்தியர்களுக்கு திறமைகளை மேம்படுத்த அரசு நடத்தும் திட்டங்கள் குறித்து தெரியவில்லை. பொருளாதார சுதந்திரத்தை அடைய மக்களுக்கு இதுகுறித்த விழுப்புணர்வு தேவைப்படுகிறது. பணி செய்வதற்கான திறமையை மாணவர்களிடையே மேம்படுத்த சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு பயற்சி அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொருளாதார சுதந்திரம் அடைவதற்கு இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. வகுப்பறை, பணி செய்யும் இடம் இடையேயான தொலைவை குறைப்பது இந்தியர்களின் கனவாகவே உள்ளது.
பணி செய்வதற்கான திறமையை பெறுவதற்கு இந்த கல்விமுறை நம் குழந்தைகளுக்கு உதவவில்லை. திறமையான தொழிலாளர்களை 70 விழுக்காடு முதலாளிகள் தேடுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பட்டம் பெற்ற 62 விழுக்காடு மாணவர்கள் வேலையின்றி தவித்துவருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பு முடித்தவர்கள் செய்யும் பணியை பி.எச்.டி முடித்தவர்கள் செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பின்மை காட்டுத் தீ போல் பரவிவரும் நிலையில், இந்த அவலநிலை தொடர்கிறது.
இதுகுறித்து, சர்வதேச தகவல் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கின்னி ரோமேட்டி, “ஊழியர்களிடையே தொழில் சார்ந்த திறமையை மேம்படுத்துவது முக்கியம்” என்றார். செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, இணைய பாதுகாப்பு, ரோபோடிக் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்பை பெறுக்க இளைஞர்களுக்கு உதவுகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை நம் பாடத்திட்டத்தில் இணைப்பது குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவும். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுக இதுபோன்ற தொழில்நுட்பங்கள் இன்றியமையாதது.
ஜெர்மனி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை போல் நம் நாட்டின் இளைஞர்களும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி, எடுத்தால் மட்டுமே நம் நாட்டு இளைஞர்களும் சவால்களை சந்திப்பார்கள்.