சூடான் நாட்டில் விவசாய நிலப் பகுதிக்குள் ஒரு மர்ம நபர் புகுந்து அங்கு பணிபுரிந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் என்ற நாடு உள்ளது. இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது. இந்த போரால் பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததனால் இடம்பெயர்ந்த சூடான் மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை மற்ற சிலர் கைப்பற்றி விவசாயம் ஆகிவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் டர்பூர் நகரில் உள்ள விவசாய நிலப்பகுதியில் போரின் போது கைப்பற்றிய இடங்களை உரிமையாளர்களிடம் கொடுக்க வேண்டும் என அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்மதம் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அந்த நிலத்தில் விவசாய வேலைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த விவசாய நிலத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு விவாசய பணிகளை செய்துகொண்டிருந்தவர்களை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.