கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகிலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.. இந்தநிலையில், கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை அடிவாரத்தில் உள்ள புன்னார்குளத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார், காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்த்ராலய குரு தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள், சுமங்கலி பெண்கள் உட்பட நிறைய பேர் கலந்துகொண்டனர்.
இந்த பூஜைக்குப் பின் பி.டி. செல்வகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.. இந்தத் கொரோனா கிருமி அழிந்து உலக மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற இந்த மகா கோ பூஜை நடத்தப்படுகிறது.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருந்தொற்றில் இருந்து மீள முடியாது என்ற அச்சத்தையும், பதற்றத்தையும் விடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
மேலும் சிறு, குறு தொழில்கள் செய்கின்றவர்கள் கிட்டத்தட்ட 4 மாதங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.. அரசு அவர்களுக்குத் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். பசி பட்டினியால் யாரும் இறந்துவிடக் கூடாது” எனக் கூறினார்.