பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவில் மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bolton என்ற பகுதியில் வசித்து வரும் மிஸ்ரா மற்றும் அஷீமா என்பவர்களுடைய 11 வயது மகளான பாத்துமா காதிர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் காணாமல் போனதாக அந்த சிறுமியுடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பால்டனிலிருந்து கிரேட்டர் மான்செஸ்டருக்கு ரயிலில் சென்ற பாத்துமா மற்றொரு ரயிலுக்கு அங்கிருந்து மாறியதாகவும், வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 1.13 மணி அளவில் London Euston ரயில் நிலையத்திற்கு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த சிறுமி மான்செஸ்டருக்கு வந்தபோது அவருடன் யாரோ ஒரு தம்பதியினர் உடன் பயணித்தது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சிறுமிக்கும் அந்த தம்பதியினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டால் அந்த சிறுமி எங்கு செல்கிறார் என்பது குறித்த தகவல் எதாவது கிடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அந்த சிறுமியுடன் தம்பதியினர் நடந்துவரும் புகைப்படம் விசாரணைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பாத்துமா காதிர் ( 11 ) கடைசியாக கருப்பு நிற புர்கா உடையில் இருந்ததாகவும், உயரம் 5 அடி 2 அங்குலம் இருப்பார் எனவும் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.