நேற்றைய போட்டியில் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மோசமான சீசன் ஆகவே இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வருகிறது. வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் பல மாற்றங்களை அணியில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
குறிப்பாக தொடர்ந்து சொதப்பி வந்த கேதார் ஜாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் இக்கட்டான நிலையில் விளையாடிய சென்னை அணி நீக்கப்பட்ட கேதார் ஜாதவை மீண்டும் இந்த போட்டியில் இணைத்துக்கொண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீஸ்சன் அணியில் எடுக்கப்பட வில்லை.போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே கேதார் ஜாதவ் எடுக்கப்பட்டதை ரசிகர்கள் விமர்சித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
அதே போல இந்த போட்டியும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. 179 ரன்கள் அடித்து சென்னை நிர்ணயித்த வெற்றி இலக்கை ஷிகார் தவான் சதத்தால் டெல்லி கேப்பிடல் அணி எளிதாக கடந்தது.
இந்த போட்டியில் கடைசி ஓவரை ரவீந்தர் ஜடேஜா விடம் தோனி கொடுத்தது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 16 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை இருந்தபோது கடைசி ஓவரை வீசிய ஜடேஜா 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். நல்ல முறையில் பந்துவீசிய பிராவோவை பயன்படுத்தாமல் ஜடேஜாவுக்கு தோனி எதற்காக பந்தை கொடுத்தார் என்று பலரும் தோனியை விமர்சித்து வருகின்றனர்.