இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜன் பாபு (59). இவர் கொரோனா பாதிப்பினால் தன்னுடைய தாயை இழந்ததால் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது மருத்துவம் படிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜன் பாபு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, நான் எளிமையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியாததால் ஒரு கடையில் வேலை பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி 10-ம் வகுப்பில் தனித்தேர்வராக வெற்றி பெற்று, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்தேன். அதன் பிறகு மைக்கோ நிறுவனத்தில் 5 வருடங்களாக பணியாற்றிய நான், கடந்த 1992-ம் ஆண்டு AMIE தேர்வில் கூடுதல் பொறியாளராக வெற்றி பெற்றேன்.
அதன்பின் தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, முதுகலை கணினி அறிவியல் படிப்பை முடித்தேன். கடந்த 1995-ம் ஆண்டு இஸ்ரோவில் வேலை கிடைத்ததால் ராக்கெட் விஞ்ஞானியாக 5 வருடங்கள் பணியாற்றினேன். இதனையடுத்து அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் இஸ்ரோவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு அங்கு சென்று விட்டேன். கடந்த 2007-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்த நான் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரு திரும்பி என்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய மகன் மற்றும் மகள் 2 பேருமே எம்பிபிஎஸ் படித்து வருகிறார்கள்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக என்னுடைய தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே என்னுடைய மடியில் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாததால், மருத்துவராக முடிவு செய்து கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் பணம் சம்பாதிக்க விரும்பும் மருத்துவராக விரும்பாததால், உயிரை காக்கும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.