கேரளாவில் கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி காப்பாற்றியதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவை காண உள்ளுர் மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இரவு நேரம் நடந்த திருவிழாவை காண்பதற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் திடீரென தவறி விழுந்து விட்டார். நல்ல வேலையாக 4 அடி ஆழ தண்ணீர் மட்டுமே இருந்ததால் அப்பெண் மூழ்கவும் இல்லை. காயமும் ஏற்படவில்லை.
இருட்டில் கிணற்றில் இளம்பெண் தத்தளித்து கொண்டிருந்தார். இதையடுத்து அந்த இளம்பெண் தன்னிடம் இருந்த மொபைல் மூலம் திரூர் இன்ஸ்பெக்டர் ஜலீலுக்கு போன் செய்து தொடர்பு கொண்டு தான் கிணற்றில் தவறி விழுந்து விட்டதாகவும், தான் உயிருக்கு போராடுவதாகவும், எப்படியாவது காப்பாற்றும்படி கூறி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.
பின்னர் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ஜலீல் தன்னுடைய உதவி அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அதே நேரம் அவர் இளம்பெண்ணை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். ஆனால் மீட்பு படையினர் 2 மணிநேரத்துக்கும் மேலாகியும் வரவில்லை. அங்கிருந்த மக்களும் கிணற்றில் இறங்க பயந்து போய் இறங்க மறுத்தனர்.
நேரம் ஆகி கொண்டே போனதால் இன்ஸ்பெக்டர் ஜலீல் இறங்க முடிவு செய்து, கயிறு கட்டி கிணற்றில் மெதுவாக இறங்கினார். பின்னர் கிணற்றில் தவித்து கொண்டிருந்த பெண்ணை கயிறு கட்டி போலீஸ் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டார். அதை தொடர்ந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை உடனே திரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டியதோடு மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.