இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியா முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் நாட்டின் அதிபர் சிறிசேனாவிடம் இது குறித்து தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தது இலங்கையில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அதிபர் சிறிசேனா மறுத்தாலும் , நாட்டின் உளவுத்துறை கவனக்குறைவின் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது அதற்க்கு இலங்கை மக்களிடம் அரசு சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்தியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் நடைபெற்ற இந்த விசாரணையில் ஆஜரான அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் இந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் எனவும் , அதிபர் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் நடத்த தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இலங்கை நாட்டின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.